இந்த நாடு அவர்களுடையதல்ல!

by Staff Writer 31-10-2020 | 8:50 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் அதனை சூழவுள்ள கடல் வலயத்தின் புவிசார் அரசியல் பெறுமதி உலகிற்கு இன்று நேற்று தெளிவான விடயமன்று. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எனும் மேலைத் தேசத்தவர்கள் ஒப்பந்தங்களின் ஊடாகவே நாட்டிற்குள் காலடி எடுத்து வைத்தனர். எனவே சீனா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் எந்த நாடாக இருந்தாலும், இவை இலங்கை குறித்து கூடுதல் கவனம் செலுத்துகின்றமை தொடர்பில் இலங்கையர்கள் கரிசனையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கடந்த வாரம் சில மணித்தியாலங்களுக்கு இலங்கைக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில், சுதந்திர இந்து பசுபிக் வலயத்தை உருவாக்குவதற்காக கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஒரு விலங்கை அடித்துக் கொன்று உணவாக்கிக்கொள்ளும் வேட்டைக்காரனே சீனா என்று அவர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இலங்கை அல்லது இலங்கை கடல் அல்லது Sea of Sri Lanka வலயம் தொடர்பான அமெரிக்க கொள்கை அவசரமாக எடுக்கப்பட்டவொரு தீர்மானமல்ல. தென் சீன கடலில் செயற்கை தீவை உருவாக்குதல், கிழக்கு சீன கடல் தீவுக்கு இணையாக ஜப்பானுடன் சீனா ஏற்படுத்திக்கொண்டுள்ள வேறுபாடுகள், ஒரு வழி ஒரு நோக்கம் செயற்றிட்டத்தின் ஊடாக இந்த கடல் வலயத்தை இராணுவ மற்றும் பொருளாதார அதிகாரத்தை மூழ்கடிக்கச் செய்யும் அபாயத்தை எதிர்நோக்கச் செய்வதற்கு அமெரிக்கா நீண்டகால திட்டத்தை தயார்படுத்தியுள்ளது. இதன்போது இலங்கையின் புவிசார் அரசியலை ஸ்தாபிப்பது அவசியமாகும். 2019 பெப்ரவரி 12 ஆம் திகதி அமெரிக்க செனட் சபையில் முன்னிலையான இந்து பசுபிக் வலயத்தின் கட்டளை அதிகாரி அட்மிரல் பில் டேவிட்சன் அமெரிக்க புவிசார் அரசியல் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது இலங்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறினார். இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இராணுவத் தொடர்புகள் வலுப்பெற்றுள்ள அதேவேளை, அமெரிக்க இராணுவம் படிப்படியாக இலங்கையினுள் தமது இருப்பை மேம்படுத்தியுள்ளதென அப்போது அவர் குறிப்பிட்டார். திருகோணமலைக்கு John C. Stennis கப்பல் வந்தமை மற்றும் பண்டப்பரிமாற்று இடம்பெற்றமை, இலங்கைக்கு இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டமை, கரையோரப் பாதுகாப்பு பலத்தை மேம்படுத்தியமை, அமெரிக்க கரையோர பாதுகாப்புப் படகொன்று வழங்கப்பட்டமை என்பவற்றை அந்த செயற்பாடுகளின் உதாரணங்களாக அவர் சுட்டிக்காட்டினார். 2007 இல் கையொப்பமிடப்பட்டு 2017 மீண்டும் விரிவாக்கப்பட்ட ACSA ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைவாக இலங்கை ஊடாக அமெரிக்க இராணுவ விநியோக நடவடிக்கைகள் சிலவும் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்க இராணுவ போக்குவரத்து விமானங்களில் பரிமாற்றிக்கொள்ளப்பட்ட பொருட்களை சோதனையிடுவதற்கேனும் இந்த ஒப்பந்தங்களின் ஊடாக இலங்கைக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. எவ்வாறாயினும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை முன்வைக்கும் அமெரிக்கா, சீனாவின் கடன் சுமைக்குள் இலங்கை சிக்கித்தவிப்பதாக தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் அதற்கு சிறந்த சான்று என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு தெற்கு துறைமுகம் என்பவற்றில் தற்போது கூடுதல் முதலீடுகள் சீனாவின் வசமே உள்ளன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், திருகோணமலை துறைமுகம், ஹம்பாந்தோட்டை விமான நிலையம், ஆகியவற்றை இந்திய - ஜப்பான் உள்ளிட்ட அமெரிக்க இந்து பசுபிக் கொள்கைக்கு இணங்கும் தரப்புகளுடன் இணைந்து மேம்படுத்துவதற்கு கடந்த காலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது. இதேவேளை, சீனாவின் கடன் சுமைக்குள் இலங்கை சிக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார் என்று கொழும்பிற்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியிருந்தது. 2018 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 12 வீதமும் 2019 இல் 10 வீதமும் மாத்திரமே சீனாவிடம் இலங்கை பெற்ற கடனாக பதிவானது என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டதன் மூலம் வழங்கப்பட்ட 1.12 பில்லியன் அமெரிக்க டொலரை மேற்கத்தைய நாடுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை செலுத்த பயன்படுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, நேற்று இணையத்தளம் ஊடாக WLA Club de Madrid எனப்படும் பூகோள செயற்பாட்டு வருடாந்த கொள்கை மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சீனாவின் கடன் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சிறந்த தொடர்புகள் எனது ஆட்சிக் காலத்தில் இருந்தன. எனினும், பொருளாதார அல்லது நிதி ரீதியாக அடிபணிய வேண்டிய தேவை எமக்கு இருக்கவில்லை. நாம் பொருளாதார ரீதியாக அதிகாரமிக்க ஒரு நாட்டிடம் பாரியளவு கடனில் சிக்கியிருக்கிறோம். எமது பொருளாதாரம் - நிதி தொடர்பாக இருக்கும் குறைபாடுகளால் நாம் இவ்வாறு தள்ளப்பட்டுள்ளோம். நமது பல அரசாங்கங்கள் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக நூற்றுக்கு 6 முதல் 9 வீத வட்டியில் உலக வங்கியிடம் கடன் பெற்றுள்ளது. பொதுவாக ஒரு நாடு நூற்றுக்கு ஒரு வீத வட்டியில் கடன்பெறுவதே முக்கியமானது. இலங்கை தற்போது பாரிய கடன் சுமைக்குள் சிக்கியுள்ளது. காலனித்துவ பொருளாதாரமாகவே அதனை நாம் பார்க்கின்றோம்
என சந்திரிகா குறிப்பிட்டிருந்தார். மறுபுறத்தில்,​ ஒரு வழி ஒரு நோக்கம் செயற்றிட்டம் தொடர்பாக விசேட நிபுணத்துவம் வாய்ந்த கீ சென்சோங் இலங்கைக்கான புதிய சீன தூதுவராக சீன அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வழி ஒரு நோக்கம் செயற்றிட்டத்தை பொதுவாக ஸ்தாபிப்பது மற்றும் வெவ்வேறு துறைகளில் நடைமுறைக்கு சாத்தியமான ஒத்துழைப்புகளை முன்னெடுப்பதன் ஊடாக இரண்டு நாடுகளினதும் மக்களுக்கு கூடுதல் பலன்களைப் பெற்றுக்கொடுக்கவும் வலையத்தின் சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் சமுத்திர அபிவிருத்தியை ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு வருகை தந்த புதிய சீன தூதுவர் விமான நிலையத்தில் தெரிவித்தார். இலங்கை என்ற வகையில் நாம் உலகத்துடன் செயற்பட வேண்டும். அது குறித்து எவரும் விவாதிக்க முடியாது. எனினும், நாடென்ற ரீதியில் நீண்ட காலம் பின்பற்றப்பட்ட அணி சேராக் கொள்கையே இலங்கையின் தாரக மந்திரமாகும். உலகின் வேறொரு நாட்டிற்கு அடிபணியாமல் நமது நாட்டின் பெறுமதியையும், வளங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த நாடுகள் தத்தமது நிகழ்ச்சி நிரலுக்குள் நமது நாட்டை ஆட்டுவிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும். சீனாவின் தாமரைக் கோபுரமாகட்டும் அமெரிக்காவின் MCC, ACSA அல்லது SOFA ஒப்பந்தங்களாகட்டும் இல்லாவிடில், இந்தியா கொண்டுவரும் யோசனைகளாக இருக்கட்டும் நாம் அவை குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தம் இச்சைப்படி யோசனைகளைக் கொண்டுவரவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் இந்த நாடு அவர்களுடையதல்ல என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்!