PCR பரிசோதனை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்து மூன்றரை பவுன் தங்கம் கொள்ளை

by Bella Dalima 30-10-2020 | 4:53 PM
Colombo (News 1st) பொது சுகாதார பரிசோதகர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரைத் தேடி விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. PCR பரிசோதனையை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்து, மஹவ - கெத்தப்பஹூவ பகுதியில் வீடொன்றில் சுமார் மூன்றரை பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நேற்று மாலை 3.30 மணியளவில் கெத்தப்பஹூவ பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் தாம் PCR பரிசோதனை நடத்தப்போவதாக தெரிவித்து வீட்டிலிருந்தவர்களுக்கு மாத்திரை வழங்கியுள்ளனர். அந்த மாத்திரையை உட்கொண்ட பின்னர் தமக்கு என்ன நடந்ததென தெரியாது என பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். தாம் சுயநினைவிற்கு வந்த பின்னரே வீட்டில் கொள்ளை இடம்பெற்றிருப்பதை அறிந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இன்று காலையிலேயே அவர்கள் மீண்டும் சுயநினைவிற்கு வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார தரப்பினரிடம் வினவிய போது, PCR பரிசோதனையின் போது எவ்வித மாத்திரைகளும் வழங்கப்பட மாட்டாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்