குருநாகலில் கொரோனா தொற்று அதிகரிப்பு

குருநாகலில் கொரோனா தொற்று அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2020 | 7:00 pm

Colombo (News 1st) குருநாகல் – மல்லவபிட்டியவில் கொரோனா தொற்றுக்குள்ளான ஏழு பேர் நேற்று (29) இரவு அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மல்லவபிட்டியவிற்கான போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை குருநாகல் சுகாதார வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய முதலாம் தரப்பினரை அடையாளங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குருநாகலில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குருநாகல் – வில்கொட பகுதியில் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு தொழில் திணைக்களத்தில் பணியாற்றும் 34 வயதான ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர் கடந்த புதன்கிழமை கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்கு பயணித்துள்ளார்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் அனுராதபுரத்தின் சில பகுதிகளுக்கு பயணித்துள்ளதுடன், அப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டு இன்று தொற்று நீக்கும் செயற்பாட்டை அனுராதபுரம் மாநகர சபை முன்னெடுத்தது.

ஹட்டன் – கொட்டகலை, ட்ரேட்டன் தோட்டம், கொட்டகலை நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள, பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றிய ஒருவருக்கும் அவருடன் தொடர்புகளைப் பேணிய ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானோரின் குடும்பத்தில் நால்வர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், எஹலியகொட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 பேர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்களாவர்.

ஏனைய நால்வரும் கொழும்பு கப்பல்துறையில் தொற்றுக்குள்ளானவர்களின் நண்பர்கள் என எஹலியகொடை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்டவர்களில் மீன் சந்தையில் பணியாற்றியவரின் மனைவியும் 11 மாதக் குழந்தையும் அடங்குகின்றனர்.

தொற்றுக்குள்ளான பெண்களில் ஒருவர் குறித்த பகுதியில் உள்ள உப தபால் நிலையத்தில் பணியாற்றுபவராவார்.

தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பினைப் பேணிய 200 பேர் வரை வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றிய பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரத்கம பகுதியில் வசிக்கும் 27 வயதான பெண், நோய் அறிகுறிகளுடன் சில தினங்களுக்கு முன்னர் காலி மஹமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக காலி மாவட்ட தொற்றுநோயியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் வெனுர சிங்காரச்சி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்