உட்புகும் கடல்நீரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

by Staff Writer 29-10-2020 | 7:47 PM
Colombo (News 1st) வட மாகாணத்தின் சில பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளதால், அப்பகுதிகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பள்ளிக்குடா பகுதியில் இன்று (29) அதிகாலை கடல் நீர் உட்புகுந்துள்ளது. கடல் நீர் நிறைந்ததால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் வீதிக்கு வந்துள்ளதுடன், அவை சேதமடைந்துள்ளன. வலைகளும் சேதமாகியுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவித்தனர். சுமார் 365 மீனவக் குடும்பங்கள் பள்ளிக்குடா பகுதியில் வசிக்கின்ற நிலையில், அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அச்சம் காரணமாக தாம் தொழிலுக்கு செல்லவில்லை என மீனவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர். இதேவேளை, கிளிநொச்சி - கவுதாரிமுனை தரைப்பகுதிக்குள் கடல் நீர் புகுந்த நிலையில், சுமார் 40 ஏக்கருக்கும் அதிகமான வயற்பரப்பு அழிவடைந்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், பூநகரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் கடல் நீர் நிறைந்துள்ள கவுதாரிமுனை பகுதியை நேற்று (28) மாலை பார்வையிட்டனர். இதேவேளை, யாழ்ப்பாணம் கல்லுண்டாய் கிராமத்தினுள் நேற்று மாலை கடல் நீர் புகுந்துள்ளது. சில வீடுகளுக்குள்ளும் கடல் நீர் நிறைந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக J-35,J-36 கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள சுமார் 310 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.