மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

by Staff Writer 28-10-2020 | 11:57 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் நிலைமை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் தோட்ட நிறுவனங்களிலோ அல்லது ஏனைய நிறுவனங்களிலோ பணிபுரிபவர்களாக இருந்தால் அவர்களுக்கு சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறியுள்ளார். அதேபோன்று, எந்தவொரு வருமானமும் இன்றி வாழும் குடும்பங்களுக்கான நிவாரணத்தை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாழ மக்கள் தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இதனூடாகவே, கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இயலுமை உறுதிப்படுத்தப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்காக இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார மலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக வாரம் முழுவதிலும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் 5000 ரூபா நிவாரணம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரம், நீர், எரிபொருள், எரிவாயு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டமொன்றும் வகுக்கப்படவுள்ளது. பொருளாதார மலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.