நிலவின் மேற்பரப்பில் தண்ணீர்: உறுதி செய்தது நாசா

நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது நாசா

by Staff Writer 27-10-2020 | 2:36 PM
Colombo (News 1st) நிலவில் சூரிய ஒளி படும் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை அமெரிக்காவின் தேசிய விண்கல மற்றும் விண்வெளி ஆய்வு மையம் நாசா உறுதி செய்துள்ளது. நாசாவின் பறக்கும் ஆய்வக விமானமான சோஃபியா மேற்கொண்ட ஆய்வில் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து நாசா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சந்திரனின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள, பூமியிலிருந்து தெரியும் மிகப் பெரிய பள்ளங்களில் ஒன்றான ‘கிளாவியஸ்’ பள்ளத்தில் நீரின் மூலக்கூறுகளை சோஃபியா கண்டறிந்துள்ளதென நாசா தெரிவித்துள்ளது. மேலும், சந்திரனில் இவ்வாறு காணப்படும் தண்ணீர் அதிகளவில் இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் -1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீரைக் கண்டுபிடித்தது. இருப்பினும், ஆராய்ச்சியாளர்களால், அது நீரின் மூலக்கூறா அல்லது ஹைட்ராக்சில் மூலக்கூறா என கணிக்க முடியவில்லை. தற்போது நிலவில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதி செய்திருக்கிறது.