எல்லை நிர்ணய குழு நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி

எல்லை நிர்ணய குழு நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 27-10-2020 | 2:00 PM
Colombo (News 1st) பிரதேச செயலக பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகியவற்றை புதிதாக ஸ்தாபித்தல், தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ளவற்றை வர்த்தமானியில் அறிவித்தல், அவற்றை மீளாய்விற்கு உட்படுத்தல் போன்றவற்றிற்கு எல்லை நிர்ணய குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயங்கள் குறித்து தௌிவுபடுத்தப்பட்டது. இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் மத்திய வகுப்பு தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்துவதற்கான கடன் வசதியினை பெற்றுக்கொடுப்பதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நன்கொடையை பெறுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, ஆசிய அபிவிருத்தி வங்கியூடாக 165 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, ருமேனியா மற்றும் ஸ்பெய்னில் இலங்கைக்கான தூதரகங்களை ஸ்தாபிக்க வௌிவிவகார அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மன்னாரில் காற்று மின்னுற்பத்தி திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 200 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 100 மெகாவாட் காற்று மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.