அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நாட்டை வந்தடைந்தார்

by Staff Writer 27-10-2020 | 7:51 PM
Colombo (News 1st) அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சற்று நேரத்திற்கு முன்னர் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார். வலுவான இறையாண்மையுள்ள இலங்கையுடன் கூட்டு சேர்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே அவரது இந்த விஜயத்தின் நோக்கம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. சுதந்திரமானதும் வௌிப்படையானதுமான இந்திய வலயத்திற்கான பொது நோக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்லவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் எதிர்பார்ப்பதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டது. மைக் பொம்பியோ நாளை காலை இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ள இராஜாங்க செயலாளர், ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார். உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லவுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடந்த வருடம் ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அந்தப் பயணம் இரத்து செய்யப்பட்டது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ உத்தியோகப்பூர்வ அதிகாரத்துடன் கூடிய அமெரிக்காவின் MCC நிறுவனத்தின் பணிப்பாளர் குழுவின் தலைவராவார். அவர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அமெரிக்காவின் சர்வதேச உளவுச் சேவையான CIA-இன் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். அத்துடன், கென்சஸ் மாநில காங்கிரஸ் உறுப்பினராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.