நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை - 7875 !

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 7875 ஆக பதிவானது

by Fazlullah Mubarak 26-10-2020 | 12:11 PM

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 7875 ஆக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 312 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 39 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 1,041 பேர் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் எனவும் ஏனைய 3,359 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 4,054 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரில் 89 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர். இவர்களில் 88 பேர் மினுவங்கொட கொத்தணியை சேர்ந்தவர்கள் எனவும் கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் 16 ஆவது கொரோனா மரணம் நேற்று பதிவானது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, கொழும்பு 02 ஐச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்த 316 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர். இதனடிப்படையில் இன்று காலை வரை 57,427 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 73 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8,421 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே நேற்றைய தினம் 9,189 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நாட்டில் இதுவரை 45 இலட்சத்து 836 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.