20-க்கு ஆதரவளித்தோரிடம் விளக்கம் கோரி அறிக்கை

20-க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸினரிடம் விளக்கம் கோரியுள்ளதாக நிசாம் காரியப்பர் அறிக்கை

by Staff Writer 24-10-2020 | 7:49 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வாக்களித்துள்ளமையினால், அது தொடர்பில் உறுப்பினர்களிடம் விளக்கம் கோரியுள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்று தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து செயலாளரின் பிரசன்னத்துடன் செயற்பாடுகளை வினவி அது தொடர்பில் கலந்தலோசிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான H.M.M.ஹரீஸ், பைசல் காசிம் , M.S.தௌபீக், நசீர் அஹமட் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் நிலைப்பாட்டை கட்சியின் உயர் பீடத்திற்கு விளக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கட்சியின் உயர் பீடம் இது தொடர்பில் கூடி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானங்களை எடுக்கும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.