மீன்பிடித்துறைக்கான விசேட சுகாதார வழிகாட்டல்கள்

மீன்பிடித்துறைக்கான விசேட சுகாதார வழிகாட்டல்களை விரைவில் தயாரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

by Staff Writer 24-10-2020 | 10:07 PM
Colombo (News 1st) தற்போதைய சூழ்நிலையில் மீன்பிடித்துறையை வீழ்ச்சியடையாமல் முன் நகர்த்துவதற்குத் தேவையான, மீன்பிடித்துறைமுகங்களுக்கான விசேட சுகாதார வழிகாட்டல்களை விரைவில் தயாரிப்பதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது மூடப்பட்டுள்ள பேருவளை துறைமுகத்திலுள்ள 32 நீண்டநாள் படகுகளிலும் காலி துறைமுகத்திலுள்ள 21 நீண்ட நாள் படகுகளிலும் 3,50,000 கிலோகிராம் மீன்கள் காணப்படுவதாக கடற்றொழில் அமைச்சு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, நீண்டநாள் படகுகளிலுள்ள மீன்களை நுகர்வோருக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதற்கான திட்டத்தை விரைவில் தயாரிப்பதற்கு இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.