Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆறாவது நாளாக சாட்சியமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா, முன்னாள் ஜனாதிபதியிடம் இன்று இரண்டாவது நாளாகவும் குறுக்குக் கேள்விகளைக் கேட்டார்.
அவரின் கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்தார்.
நான் பாராளுமன்றத்தின் அந்த தெரிவுக்குழுவை ஏற்றுக்கொள்ளவில்லை. கேள்வி கேட்டவர் என்னுடன் பாரிய குரோதத்துடன் இருந்தவர். அங்கு செயற்பட்டவர்கள் என்னுடன் குரோதத்துடன் இருந்தனர். ஆகவே, பாராளுமன்றத்தின் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சாட்சியமளித்தார்.
இதேவேளை, ஏதேனும் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில், 2019 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்களில் அறிவுறுத்தப்பட்டதா என இதன்போது வினவப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி அதனை நிராகரித்தார்.