கொரோனா சவாலை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் தெரிவிப்பு

by Staff Writer 24-10-2020 | 8:25 PM
Colombo (News 1st) உலகிற்கே சவாலாகியுள்ள கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பூகோள சுகாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு உலகின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவது மிக முக்கியமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது வருட பூர்த்தி நிகழ்வில் பல தலைவர்கள் காணொளி மூலம் இணைந்துகொண்டனர். இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் இணைந்துகொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய ஒத்துழைப்பிற்கு இதன்போது பிரதமர் நன்றி கூறியுள்ளார்.
எமக்கும் எமது பிள்ளைகளுக்கும் மிகவும் சிறந்த உலகை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகளின் சாசனத்திலுள்ள இயலுமை தொடர்பில் எமக்கு நம்பிக்கையுள்ளது. அத்துடன், மிகவும் சவாலான இந்த காலப்பகுதியில் உலகத் தலைவர்களை ஒரே தளத்திற்குக் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவியாகவுள்ளது. ஆகவே, கூட்டு நாடுகள் என்ற வகையில், இந்தப் பொறுப்பு மிகு தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகின்றோம்
என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.