உலகின் இரண்டாவது கொரோனா வலயமாக ஆசியா பதிவு

அதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவு

by Staff Writer 24-10-2020 | 5:49 PM
Colombo (News 1st) அதிகளவில் கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவாகியுள்ளது. இன்றைய தினம் பதிவான நோயாளர்களுடன், ஆசியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைக் கடந்துள்ளது. தெற்காசியாவில் இந்தியாவிலேயே அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் பாதிக்கப்பட்டோரில் 21 வீதமானோர் இந்தியாவிலேயே பதிவாகியுள்ளதுடன், 12 வீதமான உயிரிழப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. உலகில் அமெரிக்காவிற்கு பின்னர் இந்தியாவே கொரோனா தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாகும். அமெரிக்காவில் 8.5 மில்லியன் மக்களும், இந்தியாவில் 7.8 மில்லியன் மக்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் நாளாந்தம் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளங்காணப்படுகின்றனர். விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும், விவசாயிகள் தமது விவசாயக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் வளி மாசவடைவினாலும் நோயாளர்களின் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்ததாக பங்களாதேஷில் அதிக கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். எனினும், பங்களாதேஷில் நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகும் வீதம் தற்போது குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் பகுதியளவில் முடக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த வாரம் பெருமளவான நோயாளர்கள் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.