by Staff Writer 24-10-2020 | 4:31 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாணத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற 26 பேருக்கும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் T.லதாகரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 443 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்படுவதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் 866 கொரோனா நோயாளர்கள் நாட்டில் அடையாளங்காணப்பட்டனர்.
அவர்களில் 535 பேர் பேலியகொடை மீன் சந்தையில் இருந்து அடையாளங்காணப்பட்டதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 48 பேருக்கும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய 257 பேருக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காலி துறைமுகத்திலிருந்து 5 பேரும் பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 20 பேரும் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டனர்.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 7,154 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 3,495 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3,644 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.