4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை

4 சூதாட்ட நிலையங்களிலிருந்து 2.7 பில்லியன் வருமான வரியை வசூலிக்க முடியாதுள்ளது: தேசிய கணக்காய்வு அலுவலகம்

by Staff Writer 23-10-2020 | 8:56 PM
Colombo (News 1st) தேசிய வருமான வரி திணைக்களத்தால் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் 4 சூதாட்ட நிலையங்களில் இருந்து 2.7 பில்லியன் வரி வருமானத்தை வசூலிக்க முடியாது போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 4 சூதாட்ட வர்ததக நிலையங்களும் 2015 நவம்பர் 15 அல்லது அதற்கு முன்னர் சூதாட்டத்தின் மூலம் தலா ஒரு பில்லியன் ரூபாவை வருமான வரியாக செலுத்தியிருக்க வேண்டும் என 2015 - 10 ஆம் இலக்க நிதிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், 2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தேசிய வருமான வரி திணைக்களம் இந்த வரியில் 1330 மில்லியன் ரூபாவை இணைத்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், தேசிய வருமான வரி திணைக்களத்திற்கு கிடைக்கவேண்டிய 2670 மில்லியன் நிதி, திணைக்களத்தின் 2019 நிதி அறிக்கையில் நிலுவையிலுள்ள வரியாக அறிக்கையிடப்பட்டிருக்கவில்லையென தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, 2019 ஆம் ஆண்டில் கிடைக்க வேண்டிய முழு வரி 500 பில்லியனுக்கும் அதிகமாகவுள்ளதுடன், தேசிய வருமான வரி திணைக்களம் 2019 ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் 264.4 பில்லியனை மாத்திரமே குறிப்பிட்டுள்ளதாக அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 1.6 ட்ரில்லியன் வரி வருமானம் வசூலிக்கப்பட்டிருக்க ​வேண்டும் என வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லையென தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. தேசிய வருமான வரி திணைக்களத்தின் 2019 வருடாந்த அறிக்கைக்கிணங்க, 32 மில்லியன் ரூபா நிதி அலுவலக அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்காக செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வௌிநாடுகளில் இடம்பெற்ற 47 பயிற்சி வேலைத்திட்டங்கள் மற்றும் நாட்டில் இடம்பெற்ற 25 வேலைத்திட்டங்களும் இதில் உள்ளடங்குவதாக வருடாந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.