மயூரனை பதவி நீக்கும் தீர்மானம் இடைநிறுத்தம்

யாழ். மாநகர சபை உறுப்பினர் மகேந்திரன் மயூரனை பதவி நீக்குவதற்கான தீர்மானம் இடைநிறுத்தம்

by Bella Dalima 23-10-2020 | 4:38 PM
Colombo (News 1st) யாழ். மாநகர சபை உறுப்பினர் மகேந்திரன் மயூரனை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை இடைநிறுத்தி மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வி.இராமக்கமலன் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மகேந்திரன் மயூரனை மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்குவதற்கான தீர்மானத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மேற்கொண்டிருந்தது. இந்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தீர்மானத்தை இடைநிறுத்தி நீதிபதி உத்தரவிட்டார். இதேவேளை, வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை மன்றில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ். மாநகர சபைக்கு தெரிவாகிய மகேந்திரன் மயூரன், தமது பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால், மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்குமாறு அந்தக் கட்சி யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதனடிப்படையில், மகேந்திரன் மயூரனின் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாகியதாக தெரிவத்தாட்சி அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஆட்சேபித்து மாநகர சபை உறுப்பினர் மகேந்திரன் மயூரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.