தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் இடைநிறுத்தம்

by Bella Dalima 23-10-2020 | 6:23 PM
Colombo (News 1st) தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் இடைநிறுத்தப்பட்டுள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன்,M.வேலுகுமார் மற்றும் M.உதயகுமார் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். இதன்போது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பிலும் தீர்மானம் எட்டப்பட்டது. தமது கூட்டணியின் தீர்மானத்தை மீறி 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளித்த அரவிந்தகுமாரை கூட்டணியிலிருந்து இடைநிறுத்தும் தீர்மானத்திற்கு ஏகமனதான ஆதரவு கிடைத்ததாக மனோ கணேசன் தெரிவித்தார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார். இதேவேளை, அரவிந்தகுமாரின் கட்சி உறுப்புரிமை நீக்கம் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணனிடம் வினவிய போது, எதிர்வரும் திங்கட்கிழமை கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அதன் பின்னரே இறுதி முடிவு எட்டப்படும் அவர் தெரிவித்தார்.