சஹ்ரானின் மனைவி முதன்முறையாக சாட்சியம்

சஹ்ரானின் மனைவி முதன்முறையாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்

by Bella Dalima 23-10-2020 | 3:45 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலை வழிநடத்திய சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, முதன்முறையாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியம் வழங்கியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரை சிறை அதிகாரிகள் இன்று காலை ஆணைக்குழுவிற்கு அழைத்துச்சென்றனர். சாட்சியம் பதிவு செய்வதற்கு நேற்று ஆணைக்குழுவிற்கு சஹ்ரானின் மனைவி அழைக்கப்பட்டிருந்த போதும் நேற்று சாட்சியம் பதிவு செய்யப்படவில்லை. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நீதிமன்றங்களில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு இவரின் சாட்சியம் பாதிப்பாக அமையக்கூடும் என சட்ட மா அதிபர் திணைக்களம் நேற்று ஆணைக்குழுவிற்கு அறிவித்தமையால், சாட்சியம் பதிவு செய்யப்படுவதை தற்காலிகமாக இடைநிறுத்த நேரிட்டது. இதேவேளை, சஹ்ரானின் மனைவி உள்ளிட்ட 06 பேரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே நேற்று உத்தரவிட்டார். சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதீயா, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 17 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.