20 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

by Staff Writer 22-10-2020 | 7:58 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குழுநிலை விவாதத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பிலும், இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் கிடைத்த அதே எண்ணிக்கையிலான வாக்குகள் திருத்தத்திற்கு ஆதரவாகக் கிடைத்தன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன், ஆளுந்தரப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனைத்தவிர, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் ஆகியோரும் திருத்தத்திற்கு ஆதரவளித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் இஷாக் ரஹ்மான், டயனா கமகே, எம்.எஸ்.தௌபீக், பைசல் காசிம், எச்.எம்.எம் ஹாரிஸ், அ.அரவிந்தகுமார் ஆகியோரும் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். புத்தளம் மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முஸ்லிம் கூட்டணியில் தெரிவு செய்த அலி ஷப்ரி ரஹீமும் திருத்தத்திற்கு ஆதரவளித்தார். எவ்வாறாயினும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டோர் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தன. குழு நிலை விவாதத்தின் போது, இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பிலான சரத்திற்கு தனியாக வாக்கெடுப்பு கோரப்பட்டது. இந்த சரத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் ஆதரவாக வாக்களித்தார். எவ்வாறாயினும், இறுதி வாக்கெடுப்பின்போது அவர் இருபதாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தார்.   ----------------------------------- முன்னதாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 213 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நசீர் அஹமட், பைசல் காசிம், M.S. தௌபிக் ஆகியோர் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் இஷாக் ரஹ்மான், டயானா கமகே ஆகியோரும் இரண்டாவது திருத்தம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர். எவ்வாறாயினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் ஆகியோர் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் எதிராக வாக்கினை பதிவு செய்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தனர். இரண்டாவது வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில், குழு நிலை சந்தர்ப்பத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.