மன்னார் வளைகுடா பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடத்தலைத் தடுத்து பாதுகாப்பை அதிகரிக்க இந்திய கடற்படையினர் நடவடிக்கை

by Staff Writer 22-10-2020 | 5:53 PM
Colombo (News 1st) தமிழகத்தின் பாம்பன் பகுதியிலுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாம்பன் பகுதியிலுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும் தீவுப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. இதற்காக இந்திய கடற்படையின் அதிவிரைவு ரோந்துப் படகு அப்பகுதிக்கு வரவுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். அந்தப் படகு செல்வதற்கான வழித்தடங்கள் மற்றும் கடலின் ஆழம் குறித்து ராமேஸ்வரம் பகுதியிலுள்ள இந்திய கடற்படை அதிகாரிகள் நேற்று ஆராய்ந்துள்ளனர். பாம்பன் குந்துகால் துறைமுகம், குருசடை தீவு பகுதி மற்றும் பாம்பன் பகுதிகளில் நாட்டுப் படகுகளில் சென்ற கடற்படையினர், கடல் ஆழம் மற்றும் துறைமுக வசதிகள் குறித்து ஆராய்ந்துள்ளனர். இந்தப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள், கடல் அட்டைகள் கடத்தப்படுவதுடன், தங்கக் கடத்தலும் இடம்பெறுகிறது. இவற்றைத் தடுப்பதற்காக இந்திய மாநில உளவுப் பிரிவினர், கடலோர காவல்படையினர், சுங்கத் துறையினர் மற்றும் பொலிஸார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.