Google நிறுவனம் மீது அமெரிக்கா வழக்கு தாக்கல்

Google நிறுவனம் மீது அமெரிக்கா வழக்கு தாக்கல்

by Chandrasekaram Chandravadani 21-10-2020 | 8:52 AM
Colombo (News 1st) Google நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இணைய தேடல்கள் மற்றும் Online விளம்பரங்கள் என்பனவற்றில் தனியுரிமையை பாதுகாத்து கொள்வதற்கான சட்டத்தை Google நிறுவனம் மீறியுள்ளதாக தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாரிய தொழில்நுட்ப நிறுவனமான Google நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது நடைமுறைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீவிரமாக ஆராய்வதால் இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வழக்கை குறைபாடுடைய வழக்காக கருதுவதாக Google நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நீதி திணைக்களத்தின் 11 மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகளால் சமஷ்டி நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Google நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அதன் தேடுபொறி மற்றும் உலாவிகள் என்பன பயனாளர்களின் கையடக்கத்தொலைபேசிகளில் இயல்பாகவே காட்சிப்படுத்தப்படுவதற்காக பில்லியன் டொலர்கள் செலுத்துவதை நீதிபதிகள் கவனத்திற் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த உடன்படிக்கைகளினூடாக இணைய காவலாளியாக செயற்படுவதற்கான இடத்தை Google நிறுவனம் தக்கவைத்துக் கொள்ள கூடியதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனூடாக அமெரிக்காவில் 80 வீதமான தொலைக்காட்சி நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதான இயலுமையும் Google நிறுவனத்திற்கு ஏற்படுவதாக சுட்டிக்காட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் Google அதன் தேடுபொறி உலாவிகள் மற்றும் மொபைல் போன்கள் போன்ற சாதனங்களில் இயல்புநிலை விருப்பமாக நிறுவப்பட்டிருப்பதை உறுதிசெய்ய பில்லியன் கணக்கான டொலர்களை செலுத்துகிறது.