Colombo (News 1st) 20 ஆவது திருத்தம் தொடர்பிலான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகியது.
குறித்த அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உரையாற்றினார்.
அவர் தெரிவித்ததாவது,
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான வழக்குத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்தது. நான்கு காரணங்களின் கீழ் ஏனைய அனைத்து விடயங்களையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் கீழ் முன்வைக்க முடியும் என அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விசேடமாக 3 ஆவது சரத்து தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பில் குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த யோசனையின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பில் அதில் நாங்கள் உள்ளடக்கியுள்ளோம். 5 ஆவது சரத்தின் பிரகாரம் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் அவரால் எடுக்கக்கூடிய சில விடயதானங்கள் தொடர்பிலும் நீதிமன்றத்திற்கான அதிகாரம் தொடர்பிலும் இதனுள் கொண்டு வந்து அதனை அவ்வாறே செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு உச்சநீதிமன்றம் இரண்டரை வருடங்களை கால எல்லையாக்குமாறு யோசனை முன்வைத்துள்ளது. அந்த யோசனையை இதற்கு முன்னரே நாங்கள் உயர் நீதிமன்றத்திற்கு வழங்கியிருந்தோம். அதனடிப்படையில், சர்வஜன வாக்கெடுப்பிற்குத் தேவையான இரண்டு விடயங்களை முன்னெடுப்பது முடியாமல் போகலாம். அவற்றை திருத்தி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய அதற்கு உரிய சரத்துகளை முன்னெடுத்து சட்டமூலத்தை அல்லது அரசியல் அமைப்புத் திருத்தத்தை கொண்டு வர அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுப்போம்
என அலி சப்ரி குறிப்பிட்டார்.
மேலும், உயர் நீதிமன்றம் பிரச்சினை இல்லை என தெரிவிக்கும் பட்சத்தில், மக்களின் குரலுக்கு செவிசாய்த்து அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களை 40 ஆகவும் வரையறுக்க தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.