நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

by Staff Writer 21-10-2020 | 8:03 PM
Colombo (News 1st) மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்குள்ள ஒரு வர்த்தக நிலையம் இன்று மூடப்பட்டது. அந்த வியாபாரி மீகொட - காமினிபுர, 3 ஆம் ஒழுங்கை பகுதியைச் சேர்ந்தவராவார். இதேவேளை, பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட கோட்டை பொலிஸ் நிலையம் மக்கள் செயற்பாடுகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கிருமித் தொற்று நீக்கும் பணிகளின் பின்னர், இன்று காலை 9 மணிக்கு கோட்டை பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். திவுலப்பிட்டியவில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சிலர், கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டதால், அதில் கலந்துகொண்ட மொரட்டுமுல்லவைச் சேர்ந்த இருவர், இரத்மலானை - கொதலாவல ரயில்வே விடுதிகளைச் சேர்ந்த 5 பேர் நேற்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். குருநாகல் குளியாப்பிட்டிய, பன்னல, கிரிஉல்ல, நாரம்மல, தும்மலசூரிய பொலிஸ் பிராந்தியங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று பிற்பகல் முதல் அமுலில் உள்ளது. இதன் காரணமாக குறித்த பொலிஸ் பிராந்தியங்களில் சகல கடைகளும் பூட்டப்பட்டிருந்தன. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால், கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்காக குளியாப்பிட்டிய போக்குவரத்து சபை விசேட பஸ் போக்குவரத்து சேவையை முன்னெடுத்தது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 109 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 49 பேர் பேலியகொடை மீன்சந்தைத் தொகுதியில் பணியாற்றியவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். தனிமைப்படுத்தல் முகாம்களில் இருக்கும் 37 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், ஏனைய 23 பேரும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களாவர். அதற்கு அமைவாக, மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2451 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5811 ஆக பதிவாகியுள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளான 2297 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.