by Staff Writer 21-10-2020 | 8:45 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள அபயாராமய விகாரையில் விசேட கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
அபயாராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர், எல்லே குணவங்ச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இதன்போது சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
தேசிய அமைப்புகள் மற்றும் முற்போக்கு சக்தி என்ற வகையில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் எல்லே குணவங்ச தேரர் உள்ளிட்டவர்கள், 20 ஆவது திருத்ததில் இன்னமும் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தமது கடும் நிலைப்பாட்டினை சுதந்திரக் கட்சியினரிடம் தெரிவித்துள்ளனர்.
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பிலான கட்டுப்பாடுகளை நீக்கக்கூடாது எனவும் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தமது கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என தெரிவித்தார்.
இதேவேளை, இந்த திருத்தம் தோல்வியடைவதற்கு எவ்வித காரணமும் இல்லை என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க கூறினார்.