பரீட்சை மண்டபங்களின் சுகாதார பாதுகாப்பிற்கு நிதி..

A/L பரீட்சை மண்டபங்களில் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த நிதி ஒதுக்கீடு

by Staff Writer 20-10-2020 | 9:32 AM
Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைகள் இடம்பெறும் மண்டபங்களில் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பரீட்சை மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15,000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி சங்கங்களின் வங்கி கணக்குகளில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன் அந்த பணத்தினூடாக பரீட்சை மத்திய நிலையத்தின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த நிதியினூடாக பரீட்சை நிலைய பொறுப்பாளருக்கான சுகாதார பாதுகாப்பு அங்கி, தொற்று நீக்கி மற்றும் முகக்கவசம் என்பனவற்றை கொள்வனவு செய்ய முடியுமெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனூடாக, 2648 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.