20 ஆவது திருத்தம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு: நான்கு சரத்துகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என அறிவிப்பு

by Staff Writer 20-10-2020 | 8:13 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திலுள்ள நான்கு சரத்துகளை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதில் இரண்டு சரத்துகள், குழுநிலை சந்தர்ப்பத்தில் மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அமைய நிறைவேற்றப்படுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதுமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மற்றுமொரு சரத்தில் உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அந்த சரத்தையும் நிறைவேற்ற முடியும் என பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் அரசியலமைப்பின் 82 /1 சரத்திற்கு அமைவானது என்பதையும் அரசியலமைப்பின் 82/5 ஆம் சரத்திற்கு அமைவாக விசேட வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையும் சட்டமூலத்தின் 3, 5, 14 மற்றும் 22 ஆகிய சரத்துகள் அரசியலமைப்பின் 83 ஆவது சரத்தின் பிரகாரம் மக்களால் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், 3 மற்றும் 14 ஆவது சரத்துகளை உத்தேச குழுநிலை சந்தர்ப்பத்தின்போது சீர்த்திருத்துவதாக இருந்தால், அதனை நீக்க முடியும் எனவும் 5 ஆவது சரத்தில் இருக்கும் விடயத்திற்கு அமைவாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருப்பது போன்று மறுசீரமைப்பை மேற்கொண்டால் அதனையும் நீக்கிக்கொள்ள முடியும் எனவும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார். தற்போதைய அரசியலமைப்பில் ஜனாதிபதியின் அதிகாரங்கள், பொறுப்புக்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள 33 ஆவது சரத்தை மாற்ற வேண்டும் என 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அதனை மாற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்த ஏற்பாடுகளே உயர் நீதிமன்றம் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ள 14 ஆவது சரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம் கூட்டப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்க வேண்டும் என 20 ஆவது திருத்தத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த காலப் பகுதியை இரண்டரை வருடங்கள் வரை நீடிப்பதற்கான திருத்தத்தை குழுநிலை சந்தர்ப்பத்தின் போது இணைக்கவுள்ளதாக அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது. இந்த திருத்தமும் மேற்கொள்ளப்படுமாயின், சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஐந்தாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமே மாற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அடிப்படை உரிமைகள் தொடர்பிலான விடயங்களில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த விடுபாட்டுரிமை 19 ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டபோதிலும் 20 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு பூரண விடுபாட்டுரிமை கிடைக்க வேண்டும் என பிரேரிக்கப்பட்டிருந்தது. தாம் முன்வைக்கும் திருத்தங்களை இணைப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பின்றி அந்த சரத்தையும் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. புதிய சட்டமூலத்தின் 22 ஆவது சரத்தை நிறைவேற்றுவதற்கும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்பதே உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடாகும். வாக்கெடுப்பு அல்லது மக்கள் கருத்துக்கணிப்பின்போது ஏதேனும் ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த, அரச உத்தியோகத்தர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட தொழில் முயற்சிகள், அரசாங்கத்திற்கு 50 வீதத்திற்கும் மேற்பட்ட பங்குகள் உள்ள நிறுவனங்கள் தவறினால் தண்டனை வழங்குவதற்கு ஏதுவாக இருந்த ஏற்பாடுகள் நீக்கப்படுவதாக அந்த சரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த சரத்தை நிறைவேற்றுவதற்கும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. குழுநிலை சந்தர்ப்பத்தின்போது மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு மேலதிகமாக 20 ஆவது திருத்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மேலும் சில மாற்றங்களுக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரமளித்தது. உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அதிக வழக்குகளின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தேசிய பாதுகாப்பு சார்ந்த விடயங்கள் மற்றும் பேரிடர் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவசர சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது, 50 வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளின் உரிமை அரசாங்கத்திற்கு உள்ள நிறுவனங்களை கணக்காய்விற்கு உட்படுத்துவதற்கான அதிகாரத்தை கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்குவது, மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 19 ஆவது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமையவே தொடர்ந்தும் பேணிச் செல்வது என்பதே அந்த திருத்தங்களாகும்.