மாகந்துரே மதுஷின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நிறைவு 

மாகந்துரே மதுஷின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நிறைவு 

மாகந்துரே மதுஷின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நிறைவு 

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2020 | 1:12 pm

Colombo (News 1st) பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதுஷின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (20) முற்பகல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் ஆள் அடையாளம் அவரது மனைவியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மாளிகாவத்தை – எப்பல்வத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது இன்று அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் உயிரிழந்தார்.

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பிலிருந்த மாகந்துரே மதுஷ், போதைப்பொருள் சுற்றிவளைப்பு ஒன்றுக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதன்போது, 22 கிலோகிராம் ஹெரோயன் மற்றும் 02 கைத்துப்பாக்கிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்த 2 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மாளிகாவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

எவ்வாறாயினும், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் சாட்சியம் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்ட பகுதியில் காணப்பட்ட மோட்டார்சைக்கிள் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் மாகந்துரே மதுஷின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாகந்துரே மதுஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்‌ஷித்த என்பவர் 2006 ஆம் ஆண்டு தென் மாகாண சபையில் உறுப்பினராக செயற்பட்ட டெனீ ஹித்தெட்டிய கொல்லப்பட்டமை உள்ளிட்ட மேலும் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதுடன் திட்டமிட்ட மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவராவார்.

41 வயதான மாகந்துரே மதுஷ், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி துபாயில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த வருடம் மே மாதம் 5ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர், அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இருந்ததுடன் அவரிடம் நீண்ட காலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

சந்தேக நபர் கடந்த 16 ஆம் திகதியன்று மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்