இரண்டு விடயங்கள் தொடர்பில் பாரத பிரதமரின் பிரத்தியேக அவதானத்தைக் கோரியுள்ள விக்னேஸ்வரன்

இரண்டு விடயங்கள் தொடர்பில் பாரத பிரதமரின் பிரத்தியேக அவதானத்தைக் கோரியுள்ள விக்னேஸ்வரன்

இரண்டு விடயங்கள் தொடர்பில் பாரத பிரதமரின் பிரத்தியேக அவதானத்தைக் கோரியுள்ள விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2020 | 4:11 pm

Colombo (News 1st) தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பிலான இந்திய பிரதமரின் கரிசனைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டமைக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக கடிதத்தில் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்த சட்டத்தின் குறைபாடுகளை இந்திய பிரதமர் நன்கறிவார் என்று நம்புவதாகவும் விக்னேஸ்வரனின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை இந்திய உடன்பாட்டையும், 13 ஆம் திருத்தத்தையும் பாரதப் பிரதமர் வெவ்வேறாக பகுத்துப் பார்ப்பார் என தான் நம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவர் வானதி சீனிவாசனின் தலைமைத்துவத்தில் நடத்தப்பட்ட Zoom கலந்துரையாடலில் 1987 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் முழுமையான நடைமுறைப்படுத்தலானது இரு தரப்பிற்கும் நன்மைபயக்கும் என தான் சுட்டிக்காட்டியதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டு பிரதான விடயங்கள் தொடர்பில் பாரத பிரதமரின் பிரத்தியேகமான அவதானத்தையும் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பௌத்த நட்புறவை மேம்படுத்தவும், பௌத்த சமய வணக்கஸ்தலங்களை கட்டவும், புதுப்பிக்கவும் இந்தியா வழங்க உடன்பட்ட 15 மில்லியன் டொலர் நன்கொடையின் நலனை வட கிழக்கு தமிழரின் தாயகப் பிரதேசத்தில் பாவிக்கக்கூடாதென்ற உத்தரவாதத்தை இலங்கை பிரதமரிடம் இருந்து பெறுவது உசிதமானது என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இருதரப்பு ஆயுதமேந்திய படைகளின் கூட்டை வலுப்படுத்த வழங்கப்படும் உதவிகள் மற்றும் பயிற்சிகள் இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிராக பாவிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் பாரத பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்