கொரோனா தொற்றினால் போக்குவரத்து துறையின் வருமானத்தில் வீழ்ச்சி

கொரோனா தொற்றினால் போக்குவரத்து துறையின் வருமானத்தில் வீழ்ச்சி

கொரோனா தொற்றினால் போக்குவரத்து துறையின் வருமானத்தில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2020 | 5:25 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றினால் ரயில் மற்றும் பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே திணைக்களத்தின் நாளாந்த வருமானம் 190 இலட்சம் ரூபாவிலிருந்து 140 இலட்சம் ரூபா வரை குறைவடைந்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பயணிகள் இன்மையினால் தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, நாளாந்தம் 74 மில்லியன் தொடக்கம் 80 மில்லியன் ரூபாவுக்கிடையில் காணப்பட்ட துறைசார் வருமானம் தற்போது 44 மில்லியன் ரூபா வரை குறைவடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H. பண்டுக்க கூறியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு கடந்த 07 ஆம் திகதி முதல் இதுவரை 210 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வருமான வீழ்ச்சியினால் தனியார் பஸ் சேவை ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலையினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஆகவே, தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க உரிய அதிகாரிகள் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு வாகனங்களின் லீசிங் கட்டணத்திற்கான கால அவகாசத்தை 06 மாதங்களுக்கு நீடிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இது தொடர்பில் நிதி அமைச்சு ஊடாக மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

மேலும், இந்த யோசனை குறித்து தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் பிரதேச மட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரமளவில் இதற்கான தீர்மானம் எட்டப்படுமென தாம் நம்புவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்