மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 22 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 22 பேருக்கு கொரோனா

by Staff Writer 18-10-2020 | 4:29 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 22 பேருக்கு COVID - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை 2,036 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 5,497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3,403 பேர் குணமடைந்துள்ளனர். ஏனைய 2,081 பேரும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது இதேவேளை, மத்துகம ஒவிடிகல பகுதியிலுள்ள விகாரையொன்றின் 05 தேரர்கள் உள்ளிட்ட 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் யாத்திரை மேற்கொண்டவர்களே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக களுத்துறை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டார். களுத்துரை மாவட்டத்தில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கஹதுடுவ பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்ட பகுதியில் PCR பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அத்தியட்சகர் தனுக பத்திராஜா குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் எதிர்வரும் வாரம் தீர்மானமிகு வாரமாக அமையுமென்பதால், அதிக விழிப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணம் சுகாதார தரப்பினரால் வழங்கப்படும் ஆலோசனைகளை கடுமையாக பின்பற்றுமாறும் அவர் கூறியுள்ளார். அதற்கமைய தேவையற்ற பயணங்களை மட்டுப்படுத்துமாறும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்