பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மேற்பாட்டாளர் கைது

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மேற்பாட்டாளர் ஒருவர் கைது 

by Staff Writer 18-10-2020 | 3:57 PM
Colombo (News 1st) வாத்துவ பகுதியில் உயர்தர பரீட்சை மண்டபம் ஒன்றில் மாணவர் ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுதிய மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலும் பரீட்சை மோசடி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித் குறிப்பிட்டார். இந்த சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். பரீட்சை மோசடிகளை தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு உதவி பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். பரீட்சை மோசடியில் ஈடுபடுவோரின் பெறுபேறுகள் இரத்து செய்யப்படுவதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடாத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுறேுகளுக்கான பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்ப்பதற்கான வெட்டுப்புள்ளி தற்போது தயார் செய்யப்படுவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வெட்டுப்புள்ளி தொடர்பில் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்படுவதால் அவற்றை வௌியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே குறிப்பிட்டார். சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய, வழக்கு தொடர்பான அடுத்தகட்ட செயற்பாடுகள் நிறைவு பெற்றதன் பின்னர் வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படும் என அவர் கூறியுள்ளார். இந்த தடவை சுமார் 40,000 பேரை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.