அயோத்தி கோவிலுக்கு நாட்டிலிருந்தும் அடிக்கல்...

அயோத்தி ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல்லொன்று நாட்டிலிருந்து அனுப்பிவைக்கப்படவுள்ளது

by Staff Writer 18-10-2020 | 9:11 PM
Colombo (News 1st) அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இந்த கல் சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்ட ஒன்றாகும். இராமாயணத்தில் போற்றப்படும் இலங்கையின் கோவிலாகவே நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம் வர்ணிக்கப்படுகிறது. அந்த ஆலயம் புனர்நிமாணம் செய்யப்படும் போது குறித்த கல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் பின்பு இதுவரை காலமும் அந்த கல் பூஜிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அயோத்தியில் கட்டப்படும் ஶ்ரீ இராமபிராணின் கோயிலுக்கான அடிக்கற்களில் ஒன்றாக இதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் மற்றும் ஹாவாஹெலிய ஶ்ரீ முத்துமாரிஅம்மன் ஆலயம் ஆகியவற்றில் வைத்து விசேட பூஜைகள் செய்யப்பட்டன. இந்த பூஜைகளில் பாராளுமன்ற உறுப்பினர் V. இராதாகிருஸ்ணன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராமயணத்தோடு சம்பந்தப்பட்ட அந்தக் காலத்திலே நாங்கள் சீதையம்மன் ஆலயத்திலே உபயோகித்த முக்கியமான ஒரு கல்லை இப்பொழுது அயோத்திக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். இந்த புனித கல்லானது கடந்த காலங்களில் சீதாஎலிய கோயில் அமைக்கப்படும் போது எடுக்கப்பட்ட ஒரு கல்லாகும். இந்த கல் சீதாஎலிய சிதையம்மன் ஆலயத்திலும் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பூஜையிலே வைக்கப்பட்டு பரிபாலன சபையின் மூலமாக கொழும்புக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் V. இராதாகிருஸ்னண் இதன்போது தெரிவித்தார்.