வார இறுதி நாட்களில் முன்னெடுக்கும் பயணங்களை மட்டுப்படுத்துமாறு இராணுவத் தளபதி கோரிக்கை

வார இறுதி நாட்களில் முன்னெடுக்கும் பயணங்களை மட்டுப்படுத்துமாறு இராணுவத் தளபதி கோரிக்கை

வார இறுதி நாட்களில் முன்னெடுக்கும் பயணங்களை மட்டுப்படுத்துமாறு இராணுவத் தளபதி கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

17 Oct, 2020 | 4:21 pm

Colombo (News 1st) வார இறுதி நாட்களில் முன்னெடுக்கும் பயணங்களை மட்டுப்படுத்தி கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் 110 பேருக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் சீதுவ பகுதியை சேர்ந்த 48 பேரும், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதியில் 21 பேரும் அடங்குவதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

வெயாங்கொடையில் 05 பேருக்கும் மினுவாங்கொடையில் 09 பேருக்கும் திவுலப்பிட்டிய பகுதியில் 04 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொழும்பில் ஒருவருக்கும் கட்டான பகுதியில் ஒருவருக்கும் ஜா-எல பகுதியில் 02 பேருக்கும், வத்தளை, கேகாலை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, தற்போது அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படும் கம்பஹா மாட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் காணப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 5,354 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 1956 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 3,385 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்