குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

17 Oct, 2020 | 3:26 pm

Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் A.R.D.J.D.அல்விஸ், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் D.G.N.W.D. தல்துவ, குற்றத்தடுப்பு பிரிவிற்கான பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் R.A.D. குமாரி, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் H.K.R.பெர்னாண்டோ விசேட அதிரடிப்படையிலிருந்து அரச புலனாய்வு பிரிவுற்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.G.A.K.பியசேகர, சுற்றுலாப்பிரிவின் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, பிரதி பொலிஸ் மா அதிபர் M.N. சிசிர குமார, கொழும்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 8 பேருக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் நால்வருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில், இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் 18 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்