20 ஆவது திருத்தம் தான்தோன்றித்தனமான நிறைவேற்றதிகாரத்தை வழங்கும்: தேரர்கள் மூவர் ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 16-10-2020 | 3:37 PM
Colombo (News 1st) ​தேரர்கள் சிலர் கூட்டாக இணைந்து 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். 20 ஆவது திருத்தம் ஸ்திரமற்ற அரச பொறிமுறையை உருவாக்கும் என தேரர்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பெங்கமுவே நாலக்க தேரர் மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். 20 ஆவது திருத்தம் தான்தோன்றித்தனமான நிறைவேற்றதிகாரத்தை வழங்கும் என்பதுடன், அரசியலமைப்பு பேரவை மற்றும் நீதித்துறையை அது கட்டுப்படுத்தும் நிலையை உருவாக்கும் எனவும் தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாக பலவீனமான அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 30 ஆகவுள்ள அமைச்சரவையின் வரையரை நீக்கப்படுவதில் உள்நோக்கம் காணப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கு முரணாக ஜனாதிபதி செயற்படும் போது, அது குறித்து நீதிமன்றத்தை நாடுவதற்கு பொதுமக்களுக்குள்ள உரிமையும் 20 ஆவது திருத்தத்தினூடாக நீக்கப்படுவதாக தேரர்களின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் சட்டவாட்சிக்கு எதிராக ஸ்திரமற்ற அரச பொறிமுறையை உருவாக்கும் வகையில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அவ்வாறே நிறைவேற்றுவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் தங்களால் பரிந்துரைக்கப்படும் திருத்தங்களையாவது அதில் உள்வாங்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.