முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2020 | 6:22 pm

Colombo (News 1st) முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பிற்கு சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் மீது கடந்த 12 ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டு, அவர்களின் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த ச.தவசீலன், க.குமணன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்கள் மீதே சந்தேகநபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு, அவர்களின் ஔிப்பதிவு கருவிகளை பறித்துக்கொண்டமை தொடர்பில் ஏற்கனவே பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தினூடாக ஊடக சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மனுதாரர்களின் சட்டத்தரணிகள், முல்லைத்தீவில் வனவளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மன்றில் முன்வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்