முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: கண்டனங்கள் வலுக்கின்றன

by Staff Writer 15-10-2020 | 6:48 PM
Colombo (News 1st) முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள் மாவட்ட செயலகத்திலிருந்து மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மகஜர் ஒன்றை கையளித்தனர். தமது சக ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி கோரி இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் வட மாகாண ஊடகவியலாளர்கள் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்டின் முல்லைத்தீவு மாவட்ட செய்தியாளர் தெரிவித்தார். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலிருந்து மீண்டும் மாவட்ட செயலகத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திலும் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். தாக்கப்பட்ட ஊடகவிலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்குமாறும், ஊடகவியலாளர்களின் பாகாப்பை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பின்னர், முல்லைத்தீவு மாவட்ட வனவள திணைக்கள அலுவலகத்திற்கு சென்று அங்கு மகஜர் கையளிக்கப்பட்டது. இதன்போது கடழிப்பிற்கு எதிராக குறித்த அலுவலக்திற்கு முன்பாக மரக்கன்று நாட்டி வைக்கப்பட்டது. இதேவேளை - முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு ஊடக அமையம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகியன இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ். ஊடக மன்றம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை அனுப்பியுள்ளது. இந்த மகஜர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.