மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 15-10-2020 | 8:17 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 49 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டதாக COVID ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். ஏனைய 36 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சந்தித்தவர்களாவர். இதன் பிரகாரம் மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 1770 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் 5,219 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 1,826 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வேளையில் 21 மாவட்டங்களில் இருந்து கொரோனா நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். வவுனியா, திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து கொரோனா நோயாளர்கள் பதிவாகவில்லை. தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.