தடை உத்தரவு கோரி ரிஷாட் பதியுதீன் ரிட் மனு தாக்கல் 

by Staff Writer 15-10-2020 | 11:11 AM

Colombo (News 1st) 

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் புத்தளத்திலிருந்து மன்னாருக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்கள் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் பணம் தவறாக கையாளப்பட்டதாக பொது உடமை சட்டத்தின்கீழ் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 7 பொலிஸ் அதிகாரிகள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். புத்தளத்திலுள்ள இடம்பெயர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 12 வாக்காளர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அவர்களது நிரந்தர வசிப்பிடமான மன்னாருக்கு அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் அனுமதியுடனேயே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் முன்னாள் அமைச்சரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் முயற்சி நீதியானதல்ல என சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பிரதிவாதிகளுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.