ஏப்ரல் 21 தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அரச புலனாய்வுப் பணிப்பாளர் மைத்திரிபாலவிடம் கூறியதென்ன?

by Staff Writer 15-10-2020 | 8:47 PM
Colombo (News 1st) தாம் வௌிநாடு செல்வதற்கு முன்னர் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் கிடைத்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்றாவது நாளாக நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கினார். மைத்திரிபால சிறிசேன வௌிநாடு செல்வதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 16 ஆம் திகதி வரை அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பல சந்தர்ப்பங்களில் தொலைபேசியூடாக அவருடன் தொடர்பு கொண்டுள்ளமை ஆய்வறிக்கை மூலம் தெரியவருவதாக இதன்போது குறுக்கு கேள்வியெழுப்பிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். அதில் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஏப்ரல் 04 ஆம் திகதி வௌிநாட்டு புலனாய்வுப் பிரிவில் இருந்து கிடைத்த தகவல்கள் தொடர்பில் அறிவிக்கவில்லையா என இதன்போது அவர் வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, அவ்வாறு நிலந்த ஜயவர்தன தமக்கு அறிவிக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார். அனைத்து புலனாய்வுத் தகவல்கள் தொடர்பிலும் ஜனாதிபதி என்ற வகையில் தமக்கு அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்த போதிலும் அரச புலனாய்வு பணிப்பாளர் அந்த தகவல் தொடர்பில் தனக்கு அறிவிக்காமை பாரிய தவறு என முன்னாள் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கான விஜயத்தின் போது பெஜட் வீதி உத்தியோகபூர்வ இல்லத்தினூடாக அரச புலனாய்வு பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன முன்னாள் ஜனாதிபதியை தொலைபேசியூடாக தொடர்புகொண்டாரா என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது மீண்டும் வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நிலந்த தன்னுடன் பேசியதாகவும் இலங்கையில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாகவும் தனக்கு அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார். எனினும், அந்த தொலைபேசி அழைப்பு குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார். அவ்வாறென்றால் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவரால் எவ்வாறு கூறமுடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
எனக்கு காலை ​வேளையில் தொலைபேசி அழைப்பு கிடைத்ததாக ஞாபகமில்லை, ஏனென்றால், அவ்வேளையில் நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தேன். மற்றைய விடயம் இலங்கை ​நேரத்திற்கும் சிங்கப்பூர் நேரத்திற்கும் இடையில் இரண்டரை மணித்தியால வித்தியாசம் உள்ளது
என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், அங்கு இலங்கை நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், அந்த தகவல்களின் அடிப்படையில் புலனாய்வு பணிப்பாளர் தாக்குதலுக்கு முன்னரே தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி தமக்கு அது குறித்து ஞாபகமில்லையென கூறியுள்ளார். வௌிநாடு செல்லும் போது பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமித்து விட்டு செல்லும் அளவிற்கு நாட்டின் பாதுகாப்பு பாதகமான நிலையில் இருக்கவில்லையென இதன்போது சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, தற்போது காணப்படும் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தன்னை தொடர்புகொள்வதற்கு இயலுமை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எந்தளவு தொழில்நுட்ப வளர்ச்சி காணப்பட்டாலும் அரச புலனாய்வுப் பிரிவு போன்ற பொறுப்புவாய்ந்த பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவரினால் ஏன் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லையென இதன்போது நீதிபதிகள் குழாம் வினவியுள்ளது. அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, தான் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும், தனது பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கூட நெருங்க முடியாமல் இருந்ததாகவும் பதிலளித்துள்ளார். தாக்குதலை தடுக்காமைக்கான பொறுப்பை முன்னாள் பொலிஸ் மா அதிபரை ஏற்றுக்கொள்ளக் கூறியதாகவும் அவர் விரும்பும் எந்தவொரு நாட்டிற்கும் தூதுவராக நியமிப்பதாகக் கூறியதாகவும் தெரிவிக்கப்படும் விடயம் பொய்யானது எனவும் மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவில் கூறியுள்ளார். தாக்குதலின் பின்னர் சிநேகபூர்வ நாடுகளின் புலனாய்வுப் பிரிவினர், இரண்டு மாதங்கள் நாட்டில் தங்கியிருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு நேரடியாக ஆலோசனை வழங்கியதாகவோ அல்லது அவர்களுடனான தொடர்பு குறித்தோ கண்டறியப்படவில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலின் பொறுப்பை அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென முன்னாள் பிரதமர் ஆணைக்குழுவில் தெரிவித்த கருத்து தொடர்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முன்னாள் ஜனாதிபதியிடம் வினவியுள்ளார். தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் இருந்த ​போதும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு செயற்படாத அதிகாரிகள் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி வணாத்தவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் இருவர் சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்கள் செல்ல முன்னர் விடுவிக்கப்பட்டமை தொடர்பிலும் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதியிடம் வினவியுள்ளது. அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு சிபாரிசு செய்த நபர் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். எனினும், அவரை விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் முன்னாள் ஜனாதிபதியே கையொப்பமிட்டுள்ளதாக ஆணைக்குழு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் கொண்டுவரப்படும் ஆவணங்களில் தாம் கையொப்பமிடுவதாக இதன்போது முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அனைத்து ஆவணங்களையும் ஒவ்வொன்றாக பரிசீலிக்கும் இயலுமை இருக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் பொறுப்பு தொடர்பில் ஆணைக்குழு வினவியபோது,
அவ்வாறெனில், நாட்டில் ஜனாதிபதி மாத்திரமே இருக்க வேண்டும், பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர் போன்றோர் அவசியமில்லை. பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதி, புலனாய்வுப் பிரிவு ஆகிய தரப்பினர் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரியாக நிறைவேற்ற வேண்டும்
என பதிலளித்துள்ளார்.