பலாங்கொடையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு 

by Staff Writer 14-10-2020 | 11:21 AM
Colombo (News 1st) பலாங்கொடை - வளவ தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் இன்று (14) காலை வீசிய பலத்த காற்றினால் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதன்போது தேயிலை பறித்துக் கொண்டிருந்த 3 பெண் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். காயங்களுக்குள்ளான பெண்ணொருவர், பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குறித்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. 45 மற்றும் 43 வயதான இரு பெண்களே மரம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, ஹட்டன் நகரில் இரு வர்த்தக நிலையங்கள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், வர்த்தக நிலையங்களில் தங்கியிருந்த இரண்டு ஊழியர்கள் காயமடைந்துள்ளதுடன் பொருட்களும் சேதமடைந்துள்ளன. அத்துடன், கண்டி கெலாபொக்க வட்டகலை தோட்டத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் கூரை அள்ளுண்டு செல்லப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார். இ​தேவேளை, கண்டி கெலாபொக்க, கபரகல, நடுக்கணக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறனார். இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல், மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.