by Staff Writer 14-10-2020 | 5:48 PM
Colombo (News 1st) கடுவளை பதில் நீதவான் ஹேமபால ஏக்கநாயக்கவின் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
கடுவளை கொத்தலாவல விஹாரமாவத்தையில் அமைந்துள்ள பதில் நீதவானின் வீட்டில் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி சந்தேகநபரினால் பெட்ரோல் ஊற்றி தீ பந்தமொன்று எறியப்பட்டதாகவும் எனினும், அந்த சந்தர்ப்பத்தில் தீ பரவலடையவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பதில் நீதவானால் கடுவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிணங்க, சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார்.
பதில் நீதவானின் மனைவி தாழ்நில அபிவிருத்தி சபையில் சட்ட அதிகாரியாக கடமையாற்றுவதாகவும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் நிலமொன்றை நிரப்புவதற்கு அவரது அனுமதி கிடைக்காத காரணத்தால் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.