ஏப்ரல் 21 தாக்குதல்: பயங்கரவாதிகளின் இலக்கு இலங்கை இல்லை என S.B.திசாநாயக்க தெரிவிப்பு

by Staff Writer 14-10-2020 | 9:42 PM
Colombo (News 1st) இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் S.B.திசாநாயக்க ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். இதன்போது, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் இலக்கு இலங்கை இல்லை என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என S.B.திசாநாயக்க குறிப்பிட்டார். பயங்கரவாதிகளின் இலக்கு இந்தியா தான் எனவும் இலங்கையில் பாதுகாப்பு குறைந்து காணப்பட்டதால், இங்கு தாக்குதல் நடத்த அவர்கள் தீர்மானித்ததாகவும் அவர் கூறினார். இதேவேளை, ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை அடுத்து அது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரிடம் வினவியதாக தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (13) முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாட்சியமளித்துள்ளார். முன்கூட்டியே விடுக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்திய உயர்ஸ்தானிகரிடம் வினவியதாக முன்னாள் பிரதமர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு கிழக்கு பகுதியுடன் தொடர்புள்ளமையே இதற்கு காரணம் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, " பொதுவாக உலகின் பொறுப்புமிக்க அரசாங்கமொன்று பொறுப்பற்ற முறையில் தகவல்களை வழங்குவதில்லை" எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளார். இந்தளவு உறுதியான புலனாய்வுத் தகவலை இந்தியா வழங்கியிருந்த நிலையிலும் இந்திய பாதுகாப்பு செயலாளர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலும் அது தொடர்பாக ஏன் அறிவிக்கப்படவில்லை என அறிவீர்களா என இதன்போது ஆணைக்குழு வினவியது. தாம் அறிந்த வகையில் இந்திய புலனாய்வு சேவை இந்திய பிரதமரின் கீழ் இருப்பதாகவும் அது இந்திய பாதுகாப்பு அமைச்சுக்குரிய விடயம் அல்லவெனவும் முன்னாள் பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை, ஃபட்டா அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கைக்கு வருகை தந்து அதன் கருத்துக்களை பரப்புவதற்கு முயல்வதாக தகவல் கிடைத்துள்ளதென ஒரு சந்தர்ப்பத்தில் துருக்கி தூதுவர் தம்மிடம் தெரிவித்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார். அவர்களும் பயங்கரவாத கருத்துக்களை அனுமதிப்பதால், அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நாட்டிலிருந்து வௌியேற்றுமாறு துருக்கி தூதுவர் தெரிவித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த இயக்கம் ஆசியாவில் வலுவடைந்து வருவதுடன், அது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என துருக்கி தூதுவர் சுட்டிக்காட்டியதாக முன்னாள் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அது தொடர்பில் ஆராய்வதற்காக புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன், குறித்த குழுவிடமிருந்து இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை என இதன்போது தெரியவந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.