ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: கிளிநொச்சி, மட்டக்களப்பு ஊடக அமையங்கள் கண்டனம்

by Staff Writer 14-10-2020 | 7:16 PM
Colombo (News 1st) முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி ஊடக அமையம் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை மகஜர் ஒன்றை கையளித்துள்ளது. கிளிநொச்சி - இரணைமடுவில் அமைந்துள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் வைத்து இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (12) முல்லைத்தீவு - குமுழமுனை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், இதனால் ஊடகவியலாளர்களுக்கு தங்களின் கடமையை முன்னெடுத்துச் செல்வதில் அச்சம் காணப்படுவதாகவும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கிளிநொச்சி, முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற வகையில், இந்த விடையத்தில் அதிகக் கரிசனை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக்கொடுத்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் மட்டக்களப்பு ஊடக அமையமும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இலங்கையில் ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்தும் கலாசாரம் கடந்த காலங்களில் மிக சாதாரணமாக இடம்பெற்றதுடன், இந்த நாட்டில் சுமார் 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மிகுந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீண்டும் இலக்கு வைக்கப்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக இரண்டு அமைப்புகளும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் நீதி கிடைக்காத சமூகமாக ஊடகவியலாளர்கள் உள்ளதாகவும் இதுவரை படுகொலை செய்யப்பட்ட எந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கும் எந்த அரசாங்கமும் நீதி பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் மட்டக்களப்பு ஊடக அமையமும் சுட்டிக்காட்டியுள்ளன. இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கும் நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய அரசு இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை உடனடியாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.