வர்த்தமானி ஒழுங்கு விதிகளை பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 

வர்த்தமானி ஒழுங்கு விதிகளை பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 

வர்த்தமானி ஒழுங்கு விதிகளை பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2020 | 7:58 am

Colombo (News 1st) நாட்டின் 21 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மக்கள் செயற்படுவார்களாயின் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனசுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், டொக்டர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பதிவாகியுள்ள நோயாளர்களை தவிர, கொழும்பு மாவட்டத்தில 160 பேரும்  கம்பஹா மாவட்டத்தில் 140 பேரும் கொரோானா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏனைய மாவட்டங்களை பொறுத்தவரையில் சில மாவட்டங்களில் ஒருவர் மாத்திரம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

4 மாவட்டங்களில் இவ்வாறு ஒருவர் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4 மாவட்டங்களில் இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள், பிரென்டிக்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு கண்டறியப்பட்ட கொரோனா கொத்தணியை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சுகாதார அமைச்சு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

எனினும் இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டை முடக்கும் நிலை உருவாகவில்லை என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று எவ்வாறு பரவியுள்ளது என்பதை கண்டறிந்துள்ளதால், மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் இதனை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினத்திற்குள் வௌியிடப்படும் என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், டொக்டர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியாரச்சி அண்மையில் தெரிவித்திருந்தார்.

வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்படுவோருக்கு 06 மாதங்கள் சிறைத் தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட திருத்தங்களும் குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட விடயங்களை குறித்த வர்த்தமானியூடாக சட்டமாக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்