ரிஷாட் பதியுதீனை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமனம்

ரிஷாட் பதியுதீனை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2020 | 7:30 pm

 Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் சிலவற்றை நியமித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவரது பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக பொலிஸார் இன்றும் கொழும்பிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர்.

கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் புத்தளத்திலிருந்து மன்னாருக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்கள் அழைத்துச் செல்லப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் பணம் தவறாகக் கையாளப்பட்டதாகவும் பொது உடைமை சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாகவும் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சரின் கணக்காளர் அழகரத்தினம் மனோரஞ்சன் நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கிருலப்பனையில் கைது செய்யப்பட்டதுடன், இன்று பிற்பகல் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரியந்த லியனகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, நேற்று பிற்பகல் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்ற இரண்டு கார்களை கைப்பற்றினர்.

இந்த இரண்டு வாகனங்களினதும் சாரதிகளும் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வௌ்ளவத்தையில் கைது செய்யப்பட்ட குறித்த மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சாரதிகள் இருவரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

பொலிஸ் கான்ஸ்டபிளை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்திய குண்டுதாரி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை தொடர்பிலும் பொலிஸார் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்