கொரோனா தொற்று: கம்பஹா, கொழும்பு, அனுராதபுரம், கேகாலை மாவட்டங்களின் நிலைமை 

கொரோனா தொற்று: கம்பஹா, கொழும்பு, அனுராதபுரம், கேகாலை மாவட்டங்களின் நிலைமை 

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2020 | 8:23 pm

Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் ரந்தொழுகம பிரதேசத்தில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது.

குறித்த மாணவர் IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவர் அங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் இன்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியதாக சீதுவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.சுரேஷ் குமார் தெரிவித்தார்.

இதேவேளை, திவுலப்பிட்டிய குடம்மன பகுதியில் இருந்து கடந்த திங்கட்கிழமை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவருடன் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மேலும் சில மாணவர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சீதுவ பகுதியில் நேற்று 42 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இன்று அமன்தொழுவ மகா வித்தியாலயத்தில் சுமார் 600 பேரின் PCR மாதிரிகள் பெறப்பட்டன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பெண் தாதி உத்தியோகத்தர் ஒருவருக்கு ​நேற்று தொற்று உறுதியானதால், அவர் கடமையாற்றிய நரம்பியல் தீவிர கண்காணிப்பு பிரிவின் ஐந்தாம் விடுதி ஊழியர்கள் இன்று PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றிய இரண்டு பெண் தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கடந்த 10 ஆம் திகதி தெரியவந்ததை அடுத்து, பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையின் சீவலிபுர ஷாந்தாராம பிக்குனிகள் ஆசிரமத்தை அண்மித்த பிரதேசத்தில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களின் 30 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கஹபொல சிலுமின பிரிவெனாவில் 69 தேரர்கள் உள்ளடங்கலாக 89 பேரை இன்று சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் விகாரைக்கு சென்றிருந்தமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனுராதபுரத்தில் கொரோனா நோயாளி ஒருவரை சந்தித்த ஹபராதுவ பொலிஸ் நிலையத்தின் ஆறு உத்தியோகத்தர்கள் இன்று சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்கள் ஹபராதுவ பொலிஸ் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை பொது வைத்தியசாலையில் மூன்று பெண் வைத்திய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு கடமையாற்றும் 102 ஊழியர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என இன்று உறுதியானது.

இவர்களிடம் நேற்று முன்தினம் PCR மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்