ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது

by Staff Writer 13-10-2020 | 6:46 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - முறிப்பு பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் நேற்று (12) தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றை ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பக்கசார்பற்ற நடவடிக்கையை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார். இதேவேளை, சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை யாழ். ஊடக அமையம் வன்மையாகக் கண்டித்துள்ளது. அத்துடன், மீண்டும் அரங்கேறும் ஊடக வன்முறை தொடர்பில் தமது அச்சத்தைப் பகிர்ந்துகொள்வதாக யாழ். ஊடக அமையம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் வனவளத் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸாரின் ஆதரவுடனேயே இந்த மரக்கடத்தலில் ஈடுபட்டதை தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் உறுதியாக சுட்டிக்காட்டியுள்ளதாக ஊடக அமையம் குறிப்பிட்டுள்ளது. மீண்டும் ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அரச இயந்திர ஆதரவுடனான தாக்குதல்கள் நிச்சயமாக மகிழ்ச்சியான சூழலொன்றை எதிர்வருங்காலங்களில் ஏற்படுத்தாதென ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.