இலங்கை - இங்கிலாந்து இடையிலான தொடர் அடுத்த வருடம்

இலங்கை - இங்கிலாந்து இடையிலான தொடர் அடுத்த வருடம் - மிக்கி ஆர்த்தர் 

by Staff Writer 13-10-2020 | 1:30 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் நடத்த முடியும் என இலங்கை அணியின் பயிற்றுநரான மிக்கி ஆர்த்தர் (Mickey Arthur) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். BBC க்கு வழங்கிய நேர்காணலில் இலங்கை அணியின் பயிற்றுநரான மிக்கி ஆர்த்தர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான தேவை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் COVID - 19 தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இடைநடுவில் கைவிடப்பட்டது. தொடர் கைவிடப்பட்ட சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கு பின்னர் இலங்கை அணி எந்தவொரு சர்வதேச தொடரிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட முடியும் என இலங்கை அணியின் பயிற்றுநரான மிக்கி ஆர்த்தர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதன்பின்னர் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் தரப்பினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நிலை காரணமாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, IPL கிரிக்கெட் தொடரில் இன்று (13) நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹதராபாத் அணிகள் மோதவுள்ளன. துபாயில் நடைபெறவுள்ள போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.